உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து இலங்கையிடம் முன்கூட்டிய எச்சரிக்கையை இந்தியா செய்திருந்ததாக பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினமன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னால் அவர் சாட்சியமளித்தார்.அவர் அங்கு மேலும் கூறியதாவது ,
இலங்கையில் இப்படியான தாக்குதல் குறித்து இந்தியா தாக்குதலுக்கு முன்கூட்டியே இலங்கையிடம் நான்கு தடவைகள் எச்சரிக்கை விடுத்திருந்தது.இதுகுறித்து தாக்குதல் நடந்த பின்னர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் என்னிடம் தெரிவித்தது.
நாட்டின் பாதுகாப்பு சபை மற்றும் பிற தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு முன்னர் தகவல் கிடைத்ததிலிருந்து இப்படியான கடுமையான விவகாரத்தை நகைச்சுவையாக எடுக்காமல் வேகமாக செயல்பட்டிருக்க வேண்டும்.
தலைமைத்துவத்தில் பலவீனம் காணப்பட்டதை அந்த சம்பவ காலத்தில் நாங்கள் தெளிவாக அவதானித்தோம் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதன் மூலம் அவர்கள் தமது கைகளை கழுவுவது போல் தோன்றியது.நாட்டின் உளவுத்துறையை அரசியல்மயமாக்கக் கூடாது. நாட்டில் இந்த வகையான சூழ்நிலைகளைக் கையாள ஒரு சுயாதீன அமைப்பு இருக்க வேண்டும்.
பிற நாடுகளில் பல முக்கிய உளவுத்துறை சேவைகள் உள்ளன, குறிப்பிட்ட நாட்டில் அரசாங்கம் மாறிய பின் அவை மாறாது இருக்கும். அரச புலனாய்வு சேவையை கையாளும் போது அரசியல் தலையீடு நிறுத்தப்பட வேண்டும்.நாட்டின் அனைத்து மத நடவடிக்கைகளையும் தனி அமைச்சுக்களாகப் பிரிக்காமல் நிர்வகிக்க ஒருவழி அமைச்சு மட்டும் இருக்க வேண்டும்.
ஒரு அரசியல் கட்சிக்கு இனம் அல்லது மதம் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, எங்களிடம் பல தேசிய அரசியல் கட்சிகள் உள்ளன. மதம் அல்லது இனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி இருந்தால், அது நாட்டிற்கு மிக மோசமான சூழ்நிலையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், அந்த வகையான கட்சிகளை தடை செய்வதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.
பாடசாலை மாணவர்கள் ஒவ்வொரு மதத்தையும் பற்றி கற்றுக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் மாணவர்கள் தங்கள் பிரதான மதத்தை பிரதானமாகக் கொள்ள வேண்டும், அந்த வகையில் மாணவர்கள் நாட்டின் ஒவ்வொரு நபருடனும் தங்கள் சமூக ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள முடியும்.
மேற்கூறிய கருத்தை பிற மத பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இது நாட்டின் சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கான மிகவும் சாத்தியமான வழி என்று நான் நம்புகிறேன். – என்றார்.