எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானத்தை எடுத்தாலும் அதிலும் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அரசியலமைப்புச் சபை சபாநாயகரின் தலைமையில் எதிர்வரும் 12 ஆம் திகதி கூடவுள்ள நிலையில் அதற்கு சஜித்துக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை.பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட பின்னரே பாராளுமன்ற சபை விவகாரங்கள் தொடர்பில் சஜித்துக்கு அழைப்பு விடுக்கப்படலாமென தெரிகிறது.
எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி பாராளுமன்றம் கூடி ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்கு இடமளிக்குமெனவும் அதன்பின்னர் பிற்பகல் 1 மணிக்கு சபை கூடும்போது சஜித் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்படுவாரெனவும் முன்னதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.
ஆனால் ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்குப் பின்னர் பாராளுமன்றம் பிறிதொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டால் எதிர்கட்சித் தலைவர் நியமனத்தை பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுமென சஜித் ஆதரவு எம் பிக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் ஒரு சிலரால் செய்யப்பட்ட மறைமுக ஏற்பாடாக இருக்கலாமெனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது பாராளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மை ஆதரவை காண்பித்து பிரதமர் பதவியை தருமாறு கோரிக்கை விடுக்க சஜித் ஆதரவு எம்பிக்கள் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.
ஆனால் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே வி பி போன்ற காட்சிகள் ஆதரவை வழங்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் வெளிநாடு சென்று மீதும் ஜனவரி 2 ஆம் திகதியே நாடு திரும்புவாரென சொல்லப்படுகிறது.இதனால் கட்சி விவகாரங்கள் தொடர்பான உறுதியான தீர்மானங்கள் எதுவும் அதுவரை எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.