கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் நேற்று பிற்பகல் சட்டவைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதோடு அவரிடம் நேற்று இரண்டாவது நாளாகவும் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய அவர் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அதேவேளை வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.டி அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு வெளிநாடு செல்ல வீஸா வழங்கியதற்காக சுவிட்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் வெள்ளை வானில் கடத்தி பாலியல் துஷ்பியோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாரா என்பது குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன நேற்றுக்காலை சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார். அவர் மனஅழுத்தத்திற்குள்ளாகியுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மருத்துவர்களினால் பெறப்பட்ட இரு மருத்துவ அறிக்கைகளை வெளிவிவகார அமைச்சினூடாக சுவிட்சர்லாந்து தூதரகம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக அறிவித்த நீதவான் இந்த மருத்துவ அறிக்கைகள் தொடர்பான தகவல்களை உறுதி செய்வதற்காக இவ்வாறு மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிடுவதாகவும் குறிப்பிட்டார்.
அனுமதியின்றி சுவிட்சர்லாந்து பெண் பணியாளருக்கு வெளிநாடு செல்வதற்கு கடந்த 3 ஆம் திகதி நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக அறிக்கையொன்றை சமர்ப்பித்த அரச தரப்பு சட்டத்தரணி, சுவிட்சர்லாந்து பெண் பணியாளரை வெள்ளை வானில் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதோடு நிசாந்த சில்வாவுக்கு வீஸா வழங்கியது தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்து தூதரகம் எழுத்து மூலம் சி.ஐ.டிக்கு அறிவித்துள்ளதாக முறைப்பாடு கிடைத்தது. இதற்கமையவே விசாரணை ஆரம்பிக்கபட்டது.
ஆனால் 7 ஆம் திகதி காலை தூதரக அலுவலகத்தில் இருந்து வந்த வெள்ளை வானில் பெண் பணியாளரின் தாய் வீட்டிலிருந்த துணிமணிகளை எடுத்துச் சென்றதாகவும் அழைப்பாணையை ஏற்க மறுத்ததாக பாதுகாப்பு உத்தியோகஸ்தர் தங்களிடம் அறிவித்ததாகவும் அவர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
தூதரக பெண் பணியாளர் கார்னியா நாரஹேன்பிட்ட தனியார் மருத்துவமனையொன்றில் சிகி ச்சை பெறுவதாகவும் அங்குவந்து வாக்குமூலம் பெறுமாறும் சுவிட்சர்லாந்து தூதரகம் மின்னஞ்சலினூடாக சி.ஐ.டிக்கு அறிவித்துள்ளது. சி.ஐ.டிக்கு வந்து வாக்குமூலம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த கோரிக்கையை நிராகரித்ததாகவும் அவர் கூறினார்.
பின்னர் குறித்த பெண் இரு சட்டத்தரணிகள் மற்றும் மருத்துவர் சகிதம் சி.ஐ.டிக்கு வந்து வாக்கு மூலம் வழங்கினார். அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால் அவரை சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் நீதிமன்றத்திற்கு விளக்கினார்.
விசாரணையின் போது அவரின் கணவரும் இதில் தலையிட முற்பட்டதோடு ஆண் மருத்துவர் முன்னிலையில் பரிசோதனை செய்வதை பெண் பணியாளர் மறுத்ததாகவும் சி.ஐ.டி அதிகாரி தெரிவித்தார்.
இதற்கமைய அவரை சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர் செய்யாது வாக்குமூலம் மட்டும் பெறப்பட்டது என்றும் அவர் நேற்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும அவரை பெண் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர் படுத்துமாறும் அவரின் பயணத்தடையை நீக்குமாறும் கோரினார்.
சுவிட்சர்லாந்து பெண்ணிடம் வாக்குமூலம்பெறுவது பூர்த்தி செய்யப்படவில்லை என சி.ஐ.டி அறிவித்தது.
இவர் கடந்த 8 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் நேற்று (9) சி.ஐ.டியில் ஆஜரான பின்னர் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு பணித்த நீதவான் அவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளாரா என விசாரணை செய்யுமாறும் பணித்தார். அவருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அறிவித்த நீதவான் வாக்குமூலம் பெறுவது நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு பயணத்தடையை நீக்குவது குறித்து ஆராய்வதாக அறிவித்தார்.
இந்த நிலையிலே அவர் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் நேற்று மாலை சி.ஐ.டியில் இரண்டாவது நாளாக வாக்குமூலம் அளித்தார்