ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா, வௌிநாட்டுக்குச் சென்றுள்ளதாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரால் இந்த விடயம் உயர்நீதிமன்றத்திற்கு இன்று (10) அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டுப் பயணத்தடை நீடிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஜூட் ஜயமஹவிற்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை வௌிநாட்டு பயணத்தடை நீடித்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
மனு மீதான மீள்பரிசீலனை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகளிர் மற்றும் ஊடக ஒன்றியத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மனுவில் சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபர், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளர், கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாய், தந்தை ஆகியோர் சாட்சியாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.