web log free
May 06, 2024

மாதவிடாய் காலத்தில் வல்லுறவுக்குப் பின் படுகொலை

சாலையில் ஒரு செருப்பு கிடந்தது. அங்கிருந்து சற்று தூரத்தில் அந்தப் பெண் விற்பனைக்கு பொருள்கள் எடுத்துச் செல்லும் பை கிடந்தது. அதற்கும் சற்றுத் தள்ளி, ஒட்டுத் துணிகூட இல்லாமல் அந்தப் பெண்ணில் உடல், முழுக்க ரத்தம் பூசியது போல் இருந்தது. சம்பவம் நடந்தபோது அவர் மாதவிலக்காகி ரத்தப்போக்கில் இருந்தார். யாரோ பிடித்து இழுத்ததைப் போல முடிகள் இருந்தன. மார்பில் கை விரல் நகத்தால் கீறிய காயத்தில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. உள்ளங்கைகளிலும், விரல்களிலும் ரத்தம் கசித்து கொண்டிருந்தது. கண்கள் வெளியே வந்திருந்தன, தலையில் அடித்து இழுத்ததைப் போல தெரிந்தது. உடல் நலிந்து இருந்த நிலையில், ரத்தம் மெல்ல மெல்ல கருப்பாக மாறிக் கொண்டிருந்தது. தொண்டையில் அறுத்து அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.''

ஆசிபாபாத் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலையில் உயிரிழந்த பெண்ணின் உடல் இந்த நிலையில் தான் இருந்துள்ளது. உடலைப் பார்த்த அவருடைய கணவரின் மூளையில் இந்த நினைவுகள் பதிந்துவிட்டன. சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பின் அவருடைய கணவர் விவரித்த காட்சி இது. தாம் பார்த்த போது, மனைவியின் உடல் எந்த நிலையில் கிடந்தது என்பதை அவர் விவரித்திருந்தார்.

``அது ஒரு பெண்ணின் உடல் என்பதைப் போலகூட இல்லை. ஒரு பொம்மையை வைத்து விளையாடுவதைப் போல என் மருமகளுடன் அவர்கள் விளையாடி இருக்கிறார்கள்'' என்று கண்ணீருடன் அவருடைய மாமியார் கூறினார்.

நிர்மல் மாவட்டம் கானாபுர் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர், ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னுரு மண்டலில் ஒரு கிராமத்தில் சில காலம் தங்கியிருந்தனர். வீடு வீடாகச் சென்று பலூன்கள், ஹேர்பின்கள் விற்பது, தலைமுடிகளை வாங்கிக் கொண்டு பாத்திரங்கள் தருவது ஆகியவை தான் அவர்களின் தொழிலாக இருந்தது. ஜெய்னுரு மற்றும் லிங்கபுர் பகுதியில் உள்ள ஓரிரு கிராமங்களுக்கு தினமும் சென்று தொழில் செய்து வந்தனர். தங்கள் வசதிக்காக குழந்தைகளை கானாபூரில் உள்ள அவர்களின் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, ஜெய்னுருவில் ஓர் அறை எடுத்து தங்கியிருந்தனர். மனைவியை ஒரு கிராமத்தில் இறக்கிவிட்டு, கணவர் இன்னொரு கிராமத்துக்குச் செல்வது தினசரி வழக்கமாக இருந்தது. அவர் திரும்பி வரும் போது மனைவியை அழைத்துச் செல்வார்.

நவம்பர் 24 ஆம் தேதியும் அதுவேதான் நடந்தது. ஒரு கிராமத்தில் மனைவியை இறக்கிவிட்டு சென்றார். ``நாங்கள் காலை 6 மணிக்கு வீட்டில் டீ குடித்துவிட்டு, ஜெய்னுருவில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்துக்குப் புறப்பட்டோம். 10 - 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு கிராமத்துக்கு மீண்டும் நாங்கள் செல்வோம். பிறகு அடுத்த கிராமத்துக்குச் செல்வோம். காலை சுமார் 6.30 மணிக்கு அந்தக் கிராமத்தில் மனைவியை இறக்கிவிட்டு, அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு கிராமத்துக்கு நான் சென்றேன். பிற்பகல் 1 மணிக்கு மனைவியை இறக்கிவிட்ட கிராமத்துக்குத் திரும்பிச் சென்றேன். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அங்கு விசாரித்தபோது 10.30 மணிக்கே சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் கிராமத்தில் இருந்து உறவினர்களும் நண்பர்களும் சென்று தேடிப் பார்த்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் காவல் நிலையத்தில் அன்றிரவு புகார் கொடுத்தனர். உறவினர்களுடன் சேர்ந்து காவல் துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நடந்திருந்தால் உடலை தூக்கி வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால், அவர்கள் குழுக்களாகப் பிரிந்து சுற்றுப்புற கிராமங்களில் தேடினர்.

நாங்கள் தங்கியுள்ள அறைக்கு போன் செய்தேன். என் மனைவி அங்கே இல்லை என்று கூறினர். மறுபடியும் அந்தக் கிராமத்திற்கு திரும்பிச் சென்றேன். 10.30 மணிக்கே சென்றுவிட்டார் என்று எல்லோருமே கூறினர். அவரைப் பற்றி தகவல் தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள் என்று கேட்டுக்கொண்டு, என் செல்போன் நம்பரை அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தேன். பிறகு ஜெய்னுரு சென்று, பொருட்களை போட்டுவிட்டு, வேறு சிலருடன் சென்று தேட ஆரம்பித்தேன். ஆனால், மனைவியைப் பற்றிய தடயம் எதுவும் கிடைக்கவில்லை. நான் இல்லாமல் அவர் எங்கும் செல்ல மாட்டார். தீவிரமாகத் தேடியும் கிடைக்காததால் என் தம்பிக்கு போன் செய்தேன். அண்ணியைக் காணவில்லை என்று சொல்லி, நமக்கு தெரிந்தவர்களை அழைத்து வருமாறு கூறினேன்'' என்று அன்றைய தினம் நடந்த சம்பவங்களை அவருடைய கணவர் விவரித்தார்.

காலையில் மீண்டும் நாங்கள் தேடினோம். உள்ளூர் கிராமவாசிகளும் தேடுவதற்கு உதவினர். இதற்கிடையில், சாலையில் ஒரு செருப்பு கிடப்பதை இளைஞர் ஒருவர் பார்த்திருக்கிறார். சற்று தொலைவில், ஒரு பையில் சில பொருள்கள் கிடந்துள்ளன. இன்னும் சற்றுத் தள்ளி மரங்களுக்கு இடையே ஒரு சடலம் கிடந்தது. அண்ணா உடல் கிடக்கிறது என அவர் கூச்சல் போட்டார். எல்லோரும் அங்கே சென்றோம்'' என்றும் கணவர் கூறினார்.

தாம் பார்த்தபோது உடல் எப்படிக் கிடந்தது என்பதைக் கூறிய அவருடைய கணவர், ``அது ரொம்பவும் கொடூரமானது. அவர்கள் மிகக் கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அவளுக்கு மாதவிலக்காகி ரத்தப் போக்கு ஏற்பட்டிருக்கிறது. கைகளிலும், கால்களிலும் நகக் கீறல்கள் இருக்கின்றன. தொண்டையை அறுத்திருக்கிறார்கள். விரல்களை வெட்டியிருக்கிறார்கள். வலியால் உடல் துடித்திருப்பதைப் போல தெரிகிறது. உடலில் துணி எதுவும் இல்லை. அவளைக் கொடுமைப்படுத்தி கொன்றிருக்கிறார்கள். ரத்த வெள்ளத்தில் உடல் கிடந்தது.

தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றதற்கான அடையாளங்கள் இருந்தன. மார்பிலும் உடலிலும் நகத்தால் கீறிய அடையாளங்கள் இருந்தன. உடலில் இருந்து தோல் உரிந்து போயிருந்தது. உடல் தளர்ந்து போய், ரத்தம் மெல்ல கருப்பாக மாறிக் கொண்டிருந்தது. உடல் உப்பிவிட்டது. அவள் தாக்கப்பட்டிருக்கிறாள். கல்லால் அடித்து மண்டை ஓட்டை உடைத்திருக்கிறார்கள். கண்கள் வெளியே வந்துவிட்டன. தன்னை விடுவித்துக் கொள்ள போராடியதன் அடையாளமாக அவளுடைய கால்கள் குறுக்கே இருந்தன. கழுத்து, தொடைகள் மற்றும் உடலின் அடிப்பகுதிகளில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. வெறும் கைகளால் கத்தியை அவள் பிடுங்கியபோது நரம்பு அறுபட்டிருக்கிறது'' என்று கூறினார். சோகத்துடன் இவற்றை அவர் தெரிவித்தார்.

``ரத்த வெள்ளத்தில் அவளுடைய உடலை போட்டிருக்கின்றனர். அவளுடைய கைகளை உடைத்திருக்கிறார்கள். உடல் முழுக்கவே கருப்பாகிவிட்டது. துணிகள் எதுவும் இல்லை. தொண்டையை அறுத்திருக்கிறார்கள். தன் தலைமுடியை அவள் இழுத்துக் கொண்டிருக்கிறாள். வேதனையில் துடித்திருக்கிறாள். ஆனால் தொண்டையை அறுத்த நிலையில் அவளால் என்ன செய்ய முடியும்? ஒரு பொம்மையை வைத்து விளையாடுவதைப் போல என் மருமகளை வைத்து அவர்கள் விளையாடி இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து நான் வேதனையில் துடித்தேன். தலைமுடி அலங்கோலமாக இருந்தது. அது ஒரு பெண்ணின் உடலைப் போலவே இல்லை. ஒரு பிசாசின் உடலைப் போல இருந்தது'' என்று அவருடைய மாமியார் அழுதபடி கூறினார்.