ரெலோ கட்சியில் இருந்து விலகிய அனைவரும் இணைந்து தமிழ்த் தேசியக் கட்சியை இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அக்கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிகாந்தா மிக விரைவில் தமிழ்த் தேசிய கட்சிகள் பல இணைந்து புதிய தலைமைத்துவத்தின் கீழ் மாற்றுத்தலைமை ஒன்றையும் உருவாக்கவுள்ளோம் என்றும் சூளுரைத்தார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவர்களின் கட்சி அலுவலகத்தில் அவர் இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகள் மழுங்கடிக்கப்படக் கூடாது என்றே நாம் இந்த கட்சியை ஆரம்பித்துள்ளோம். எமது இனத்தின் விடுதலைக்காக பல இழப்புக்கள் தியாகங்கள் என்பன நடந்தேறியுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களாகிய நாம் காத்திரமான அரசியல் தீர்வினை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்குடனேயே நாம் செயற்படவுள்ளோம். அது காலத்தின் கடடாய தேவையாகவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு தமிழ் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பாப்புக்களையும் நேர்மையாக கட்டிக்காத்து நிறைவேற்றும் என்ற மக்களின் நம்பிக்கை மெல்ல மெல்ல சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பிடம் இருந்து தமிழ் இனம் அரசியல் அபிலாஷைகளை எதிர்பார்க்க முடியாது என்ற கசப்பான உண்மை கண் எதிரே நிற்கின்றது.
எனவே நேர்மையான நிதானமான அரசியல் தலைமைத்துவம் ஒன்று தேவையாகவுள்ளது. எனவே ஒத்த கருத்துடைய பிற தேசியக் கட்சிகளான வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூடடணி, ஈ.பி.ஆர்.எல்.எப்,என தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து புதிய தலைமைத்துவத்தின் கீழ் மாற்றுத் தலைமை ஒன்றை மிக விரைவில் உருவாக்குவோம்.அதற்கான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.என்றார்.
இதேவேளை புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சியின் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,துணை தலைவராக சிவகுருநாதன்,தேசிய அமைப்பாளராக விமலராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.