சுவிஸ் தூதரக ஊழியரான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் மற்றும் அவரது கணவரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளை உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னாவிடம் சிஐடியினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய நீதவான் குறித்த உத்தரவை நேற்று (19)வழங்கியுள்ளார்.
குறித்த சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசிகளை அரச பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து அறிக்கைகளைப் பெறுமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) உரிய அனுமதியை வழங்குமாறு வெலிக்கடை சிறை கண்காணிப்பாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்ஸர்லாந்து உள்ளூர் தூதரக ஊழியர் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ், இன்று (19) நீதிமன்றம் உத்தரவிற்கமைய, வைத்தியப் பரிசோதனைக்காக அங்கொடை தேசிய மனநல நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கடந்த நவம்பர் 25 ஆம் திகதி அவரை கடத்தியதாக தெரிவித்து செய்த முறைப்பாட்டை அடுத்து, அவர் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வழங்குவதாலும், அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்து, கடந்த திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டதோடு, எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.