ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாத காலப்பகுதியில் மக்கள் நேயமிக்க பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை பின்வருமாறு:
“சுபீட்சத்தின் நோக்கு” பிரகடனத்தினால் மக்கள் பெற்றுள்ள நன்மைகள்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று கடந்த ஒரு மாத காலத்திற்குள் மேற்கொண்ட தீர்மானங்கள் மக்களின் பெரும் பாராட்டுதல்களை பெற்றுள்ளன.
சுபீட்சத்தின் நோக்கு, கொள்கை பிரகடனத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.
- 300 மில்லியன் ரூபாவிற்கு குறைந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காக பெற்றுக்கொண்ட கடன்கள் மீளச் செலுத்துதலை இடைநிறுத்தல்.
- தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகமொன்றை ஸ்தாபித்து தேசிய பாதுகாப்பு பற்றிய உயர்மட்ட பாடநெறிகளை உருவாக்குவதற்கான வரைவினை தயாரித்தல்.
- கல்வி தொடர்பான செயலணியை உருவாக்கி, கல்வி மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை முறையாக திட்டமிட்டு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு பாடசாலை வீதம் மும்மொழி பாடசாலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- க.பொ.த உ/தரம் சித்தியடையும் மாணவர்களை துரிதமாக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தல்.
- பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுக்கொள்ளாத உயர்தரம் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டமொன்றினை விரைவில் உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
- தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக நிறுவனங்களாக மாற்றுவதற்காக குழுவொன்று நியமிக்கப்படல்.
- சர்வதேச தொழிற்சந்தைக்கு பொருத்தமான வகையில் பயிற்சி நெறிகளை ஆரம்பித்து, நிபுணத்துவமுடைய இளந்தலைமுறையை தொழிற்சந்தைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- வறுமையை இல்லாதொழிக்கும் முதன்மை நோக்குடன் வறுமைகோட்டின்கீழ் வாழும் குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் நிபுணத்துவமற்ற இளைஞர், யுவதிகளுக்கான ஒரு இலட்சம் அரச தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.
- தகவல் தொழிநுட்பத்துறையில் தொழிற்சந்தையை நோக்காகக்கொண்டு தகவல் தொழிநுட்ப சான்றிதழ் பாடநெறிகளை தொடர்வதற்கு 1000 பேருக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல்.
- பட்டம், வெசாக்கூடு போன்ற உற்பத்திகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கான சட்ட வரைவினை தயாரித்தல்.
- அரச முதலீடு, தேசிய அபிவிருத்தித் திட்டங்கள், பெறுகை நடவடிக்கைகள், செயற்திட்ட பகுப்பாய்வு மற்றும் முகாமைத்துவ துறைகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பணியகமொன்றினை நிறுவுதல்.
- கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டிற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றலில் அமைச்சு மட்டத்தில் செயலணியொன்றினை ஸ்தாபித்தல்.
- உள்நாட்டு கைத்தொழில் மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த மூலப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மணல்மண் மற்றும் களிமண் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமையை நீக்குதல்.
- பாரம்பரிய சிறு கைத்தொழில் துறையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
- மாதாந்தம் 21 மில்லியன் ரூபா வாடகை செலுத்தி தனியார் கட்டிடத்தில் இயங்கிய விவசாய அமைச்சினை அங்கிருந்து அகற்றி கமநல நிலையத்திற்கு கொண்டு செல்லல்.
- வாகன போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கான மாற்று வழியாக ஒரு இலட்சம் கிலோமீற்றர் நீளமுடைய மாற்று வீதி வலையமைப்பினை உருவாக்குவதற்கான வரைவினை தயாரித்தல்.
- அரச நிறுவனங்களின் வினைத்திறனை கண்டறிவதற்காக குறித்த நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளல்.
- எம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் விரிவான ஆய்வினை மேற்கொண்டு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றினை நியமித்தல்.
- நாட்டிற்கு எதிராக செயற்படும் 1000த்திற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- ஜனவரி முதலாம் திகதி முதல் ஊடகங்களில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கான எழுத்துரிமையை உரிய பாடகர், பாடகிகளுக்கு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தல்.
- கடந்த அரசாங்கத்தினை விமர்சிக்காது புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்லல்.
- அரச நிறுவனத் தலைவர்களின் சம்பளத் திருத்தம், 20 இலட்ச ரூபாவாக காணப்பட்ட டெலிகொம் நிறுவனத் தலைவரின் சம்பளத்தினை இரண்டரை இலட்சமாக குறைத்தல்.
- அரச நிறுவனங்களின் பெறுகை நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதற்கு பணிப்புரை விடுத்தல்.
- அரச நிறுவனங்களில் நடத்தப்படும் தேவையற்ற வைபவங்களை நிறுத்துவதற்கு பணிப்புரை விடுத்தல்.
- அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படும்போது அனைத்து மாவட்டங்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- அரச ஊடக நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- பாதாள உலகத்தினரை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் தேடுதல்களில் ஈடுபடுவதற்கு பொலிஸ் அதிரடிப்படையினருக்கு அதிகாரங்களை வழங்குதல்.
- கோதுமை இறக்குமதியில் காணப்பட்ட ஆதிக்கத்தினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை நீக்குவதற்காக ஏனைய இறக்குமதியாளர்களும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தல்.
- ஜனாதிபதியின் ஆளணியினர், வாகன பேரணி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக ஜனாதிபதி அவர்கள் தாம் வசிக்கும் வீட்டினையே தேர்ந்தெடுத்தல்.
- இந்தியா, சீனா போன்ற நாடுகளைப் போன்று உலகின் ஏனைய பலசாலி நாடுகளும் எமது நாட்டிற்கு வருகை தந்து, எம்மீது நம்பிக்கைக்கொண்டு, எமது தனித்துவத்திற்கு மதிப்பளித்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.
- 9 மாகாணங்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட பொறுப்பினை இராணுவத்தினரிடம் வழங்கும் நோக்கில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடல்.
- சுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய குழுக்களின் அவதானத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டங்கள்.
- இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையினை 16 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையினை கட்டுப்படுத்துவதற்கும் மக்களுக்கு உறுதியளித்தல்.
- அரச நிறுவனங்களில் ஜனாதிபதி அவர்களினதும் ஏனைய நிரல் அமைச்சர்களினதும் பெயர் பொறிக்கப்பட்ட உருவப்படத்திற்குப் பதிலாக வீதி பெயருடன் அரச இலச்சினையை காட்சிப்படுத்துவதற்கு பணிப்புரை விடுத்தல்.
- அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளல்.
- தொலைபேசி கட்டணங்களில் அறவிடப்பட்ட 25 சதவீத வரியை குறைத்தல்.
- 15 சதவீதமாக காணப்பட்ட VAT வரியினை 8 சதவீதமாக குறைத்தல்.
- மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல்