முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு, குற்றப்புலனாய்வு பிரிவு வலைவீசி தேடிகொண்டிருக்கிறது.
கைது செய்வதற்கான பிடியாணை 24 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட போதிலும் 72 மணிநேரம் கடந்தும் அவர், இதுவரையிலும் கைதுசெய்யப்படவில்லை.
இந்நிலையில், அவர் தங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் மூன்று வீடுகள், இரண்டு நாட்களாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கொழும்பிலுள்ள இரண்டு வீடுகளும் பேருவளையில் உள்ள வீ்டொன்றுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கொழும்பு ஜாவத்தையிலுள்ள வீட்டில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றுமாலை சோதனைக்கு உட்படுத்திய போது, விசேட அதிரடிப்படையினரும் இணைந்திருந்தனர்.
இந்நிலையில், ராஜித சேனாரத்ன சுமார் 10 மணிநேர நாடகமொன்றை நேற்று (26) அரங்கேற்றியிருந்தார்.
இறுதியில், நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சென்றிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் அமைச்சர் ராஜிதவிடமும் அவருக்கு வைத்தியம் பார்த்த வைத்தியரிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்விருவரிடமும் நள்ளிரவு 12 மணி கடந்தும் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
26 ஆம் திகதியன்று ராஜிதவும் அவரது தரப்பும் 10 மணிநேரம் நடத்திய நாடகத்தின் பிரகாரம்...
1. முற்பகல் 11 மணி- பிடிவிறாந்தை மீள அழைக்குமாறு கோரி, ராஜிதவின் சட்டத்தரணிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
2. பிற்பகல் 1.40 மணி- மீள அழைக்க கோரி தாக்கல் செய்திருந்த மனுவை, சட்டத்தரணிகள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
3. மாலை 4.30 மணி- விசேட அதிரடிப்படையினரும், சி.ஐ.டியினரும் இணைந்து ஜாவத்தையிலுள்ள ராஜிதவின் வீட்டை சோதனையிட்டனர்.
4.மாலை 6.40 மணி- சோதனை முடித்துகொண்டு சி.ஐ.டியினரும் விசேட அதிரடி படையினரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
5. இரவு 8.30 மணி- முன்னாள் அமைச்சர் சேனாரத்ன, நாரஹேன் பிட்டியிலுள்ள லங்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
6. இரவு 8.30 மணிக்குப் பின்னர்- லங்கா வைத்தியசாலைக்குச் சென்றிருந்த சி.ஐ.டியினர். நள்ளிரவு 12 மணி கடந்த நிலையிலும், ராஜிதவிடமும் அவரை பரிசோதித்த வைத்தியரிடமும் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர் என தகவல்கள் தெரிவித்தன.