web log free
November 28, 2024

ராஜிதவுக்கு விளக்கமறியல் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி- வீடியோ இணைப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (27) பிற்பகல் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நடைப்பெற்ற வௌ்ளை வேன் கடத்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ராஜித்த சேனாரத்னவுடன் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்று சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துக்களை தெரிவித்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கடந்த 24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுடன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (26) மற்றும் நேற்று முன்தினம் (25) ராஜித்த சேனாரத்னவின் கொழும்பில் உள்ள வீட்டிற்கும் பேருவளையில் உள்ள வீட்டிற்கும் சென்றிருந்த போதிலும் அவர் அந்த இடங்களில் இருக்கவில்லை.

இந்த பின்னணியில், தம்மை கைது செய்வதற்கு எதிராக நீதிமன்ற பிடியாணையை பெற்றுக் கொள்ள ராஜித்த சேனாரத்ன நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அதனை அவரின் சட்டத்தரணிகள் நேற்று (26) மாலை விலக்கிக்கொண்டனர்.

இவ்வாறான நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்றிரவு (26) நாரஹேன்பிட்டியவில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் நேற்றிரவு ராஜித்த சேனாரத்னவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ள லங்கா வைத்தியசாலைக்கு சென்ற குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலே, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று மதியம் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

Last modified on Saturday, 28 December 2019 04:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd