கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சாதனை!
2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் வடக்கு மாணவர்கள், பல்வேறான பிரிவுகளில் சாதனை படைத்துள்ளனர்.
இதன்படி, வர்த்தகப் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவானந்தம் ரகுராஜ் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் 107வது இடத்தையும் பெற்றுள்ளார்.
கணிதப்பிரிவிலும், யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதல் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 12 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, உயிரியல் (bio) பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் கிருஷிகன் ஜெயனாந்தராசா அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வணிகத்துறை
வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவி இரவிச்சந்திரன் யாழினி சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியே இவ்வாறு வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் குறித்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையிலேயே இவ்வாறு சாதித்துள்ளார்.
குறித்த மாணவியையும், இவருடைய தாயாரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கலைப் பிரிவில்
கலைப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கேங்கவரதன் நிலக்ஸன் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து
2019ம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும்.
அதேவேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.