கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிக்கிச்சை பெற்றுவரும், விளக்கமறியல் கைதியான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி, இறுதி நேரத்தில் கைகூடவில்லை.
இதனால், சுமார் ஐந்து மணிநேரம் முயற்சிகளை மேற்கொண்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள், தம்மோடு அழைத்துவந்திருந்த அம்புலன்ஸ், பாதுகாப்பு வாகனங்களுடன், மாலை 6.30 மணியளவில் சிறைச்சாலைக்கு திரும்பிவிட்டனர்.
முன்னதாக, தனியார் வைத்தியசாலைக்கு இன்றுகாலை சென்றிருந்த வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி, அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதனைபின்னர், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான பணிப்புரையை விடுத்தார்.
எனினும், ராஜிதவுக்கு சிகிச்சையளித்துவந்த வைத்தியர், அவருடைய நிலைமை மோசமடைந்து வருவதால், வைத்தியசாலையிலிருந்து மாற்றுவது சிரமமானது என, தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், அவருடைய உயிருக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அதற்கு தானே, பொறுப்பு சொல்லவேண்டுமென, சிறைச்சாலை வைத்தியசாலையின் அதிகாரியும், கொழும்பு நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இந்நிலையிலேயே ராஜிதவை மாற்றுவதற்கான, முயற்சி கைகூடாத நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அங்கிருந்து ஐந்து மணிநேரத்துக்குப் பின்னர் திரும்பியுள்ளனர்.