பொலிஸ், சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை, நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர்படுத்தவேண்டும்.
ஒரு நீதிமன்றத்தில் அல்ல, இரண்டு நீதிமன்றங்களில் அவரை இன்று (30) கட்டாயம் ஆஜர்படுத்தவேண்டும்.
எனினும், அவரை நீதமன்றத்துக்கு அழைத்து வருவதில் சிக்கலான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
கடந்த 24ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, மூன்று நாட்களுக்குப் பின்னர், நாரஹேன்பிட்டியலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர், 27ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார்.
வைத்தியசாலைக்குச் சென்றிருந்த கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான், அவருடைய உடல்நிலையை கவனத்தில் கொண்டு, இன்று 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், தன்னை கைது செய்யவேண்டாம் எனக் கோரி தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவும் இன்றையதினமே, விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், தனியார் வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு ராஜிதவை மாற்றுவதற்கு நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் கைகூடவில்லை.
இவ்விரு விசாரணைகளுக்காகவும் நீதிமன்றங்களுக்கு இன்று (30) அழைத்துவரப்பவேண்டிய ராஜித சேனாரத்ன எம்.பி, நாரஹேன்பிட்டியவில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில், நேற்றிரவு (29) அனுமதிக்கப்பட்டார்.
இதனால், இன்றைய விசாரணைக்கு அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துவருவதில், சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.