ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சாள்ஸ் இன்று (30) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று (30) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்துக்கு தமிழர் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படவேண்டும் என கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துவந்தது.
அவ்வாறு ஆளுநராக நியமிக்கப்பட்டாலும் அது ஜனாதிபதியின் கையாள் என விமர்சித்தும் வந்துள்ளது.
இந்நிலையில். வடக்கில் சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளராக சாள்ஸ் நியமிக்கப்பட்டமையால், வடக்குக்கு தமிழர் ஒருவரே ஆளுநராக நியமிக்கவேண்டும் என்ற கோஷத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் முன்வைக்காது என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.