web log free
September 08, 2024

காருக்கு பேராசைப்பட்டு இலட்சத்தை இழந்த யாழ்.குடும்பம்

அதி சொகுசு ரக காருக்கும், ஸ்ரேலிங் பவுண் பணத்திற்கும் ஆசைப்பட்டு 31 இலட்சம் ரூபாவை குடும்பம் ஒன்று இழந்துள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் பணி நிமித்தம் காரணமாக மன்னாரில் தங்கி நின்று பணியாற்றி வருகின்றார். அந்தவகையில், தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு, புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும், ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் சீட்டிழுப்பு ஒன்றில் வெற்றிப்பெற்றுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இது தொடர்புில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள மின்னஞ்சல் ஊடாக தொடர்பினை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த பெண் மின்னஞ்சலுடன் தொடர்பினை ஏற்படுத்திய போது, சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என கூறி சில போலி ஆவணங்கள், கார், காரின் திறப்பு படம் மற்றும் கட்டுக்கட்டாக ஸ்ரேலிங் பவுண்ஸ் உள்ள படங்களை மின்னஞ்சல் ஊடாக மர்ம கும்பல் ஒன்று அனுப்பியுள்ளது.

இதன்பின்னர் மர்ம கும்பலின் மின்னஞ்சல் ஊடாக, முதல் கட்டமாக லண்டனில் வரி கட்ட வேண்டும் என கோரி 92 ஆயிரம் ரூபாவை வங்கியில் வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி அவர்கள் வங்கியில் பணத்தினை வைப்பிலிட்டு உள்ளனர்.

இதனையடுத்து ஒரு கிழமை இடைவெளியின் பின்னர், திணைக்களங்களுக்கு வரி கட்ட வேண்டும் உள்ளிட்ட சில காரணங்களை கூறி மின்னஞ்சல்களை அனுப்பி கட்டம் கட்டமாக 31 இலட்சம் ரூபாய் பணத்தினை அந்த மர்ம கும்பல் பெற்றுள்ளது.

இறுதியாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கான பண பரிசிலும், காரும் இலங்கை வந்து விட்டது எனவும் அதனை பெற்றுகொள்ள கொழும்பு வெள்ளைவத்தை பகுதிக்கு வருமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனை நம்பி குறித்த குடும்பத்தினர் கொழும்பு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை சந்தித்த மர்ம நபர் ஒருவர் பெட்டி ஒன்றினை கொடுத்து, பரிசுத்தொகையான ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும், காரின் திறப்பும் உள்ளது எனவும் கூறி அந்த பெட்டியை கையளித்துள்ளார்.

பெட்டியை உடனே திறந்து பார்க்காதீர்கள். இந்த பரிசுத்தொகை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரிய வந்தால் இலங்கையில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் அத்துடன், வரியாக பெருந்தொகை கட்ட வேண்டி வரும் நீங்கள் வீடு செல்லுங்கள் இந்த பெட்டியின் திறப்பு தபால் மூலம் அனுப்பி வைக்கிறேன் என கூறி குறித்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்பிய இவர்கள் சில தினங்கள் கடந்த நிலையிலும், திறப்பு வராத நிலையில், மின்னஞ்சல் ஊடாக அந்த மர்மநபர்களை தொடர்பு கொள்ள மின்னஞ்சல்களை அனுப்பிய போது பதில்கள் வரவில்லை.

தம்மை கொழும்புக்கு அழைத்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, குறித்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டது.

இதனை அடுத்து சந்தேகம் அடைந்தவர்கள் குறித்த பெட்டியை உடைத்து பார்த்த போது, உடைந்த கண்ணாடி போத்தல்கள், பஞ்சு, நாணயத் தாள்கள் அளவில் வெட்டப்பட்ட கடதாசி துண்டுகள் என்பன காணப்பட்டுள்ளன. இதன்போதே அவர்கள் தாம் ஏமாந்ததை உணர்ந்துள்ளார்கள்.

குறித்த குடும்பத்தினர் சீட்டிழுப்பு பரிசினை நம்பி தம்மிடம் இருந்த சேமிப்பு பணம், நகைகள் என்பவற்றை இழந்துள்ளதுடன், ஊரில் வட்டிக்கு பெருந்தொகை பணத்தினையும் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக நேற்றைய தினம் (திங்கட்கிழமை) காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மோசடி கும்பல் பல்வேறு வங்கி கணக்குகள் ஊடாகவே பணத்தினை ஏமாற்றி பெற்றுள்ளனர் எனவும், அது தொடர்பான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.