web log free
September 08, 2024

19ஐ கொல்ல விஜயதாஸ முயற்சி- கடும் எதிர்ப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்த அரசியலமைப்பின் 21ஆம் 22ஆம் திருத்தச் சட்டமூலத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

21 வது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் சில உறுப்புரைகளை மாற்றியமைப்பதற்கும், 22 வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தின் மூலம் 15 வது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்வதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தனது தனிப்பட்ட யோசனைக்கு அமைய, 15 வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்து, தேர்தல் மாவட்டம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுக் கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்று பெற்றுக்கொள்ள வேண்டிய 5 சதவீத வாக்குகளுக்குப் பதிலாக முன்பிருந்தவாறு 12.5 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு 21 வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தின் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கும் போது அரசியலமைப்புச் சபையின் அனுமதிக்குப் பதிலாக நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் கருத்துக்களை கோரி ஜனாதிபதி அந்த நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், பாராளுமன்றச் செயலாளர், குறைகேள் அதிகாரி போன்ற பதவிகளுக்காக நியமிக்கும் போது அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக பிரதமரின் யோசனை கோரப்பட வேண்டுமென்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பை வகிக்க வேண்டும் என்றும் ஏனைய அமைச்சுக்களையும் அவரின் கீழ் வைத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் கீழ் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் அமைப்புச் சபை பக்கச்சார்பாக செயற்பட்டதென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியின் அர்த்தத்தை யதார்த்தபூர்வமாக்கும் தேவை அந்த அரசாங்கத்தில் பிரதான பதவிகளை வகித்தவர்களிடம் இருக்கவில்லை. பெரும்பாலான துறைகளில் உயர்ந்தபட்ச அளவில் அரசியல் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டார்.

இதேவேளை, விஜயதாஸ எம்.பியின் இந்த முயற்சிக்கு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தனது டுவிற்றர் கணக்கில், இது மிகவும் ஆபத்தானது. சுயாதீன குழுக்களை கொல்வதற்கான முயற்சி எனத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய ஜே.வி.பியின் எம்.பியான விஜித ஹேரத், இந்த திருத்தங்கள் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிமைக்கும் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, அக்கட்சியின் மறுமொரு உறுப்பினரான பிமல் ரத்னாயக்க, இந்த திருத்தங்கள் இரண்டும் தோற்கடிக்கப்படவேண்டும். இல்லையேல், நாடு இருண்ட யுகத்துக்கு சென்றுவிடும் எனத் தெரிவித்துள்ளார்.