தலைமறைவாகியிருந்த அந்த உயர் அதிகாரியை தேடிப்பிடித்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது, நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த தலைமை அதிகாரி, பெண் ஊழியரொருவருக்கு கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டுக்காக இம்மாதம்14ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (06) நண்பகல் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதவான் றிஸ்வி முன்னிலையில் விசாரிக்கப்பட்டபோதே, நீதவான் மேற்படி உத்தரவை வழங்கினார்.
பெண் ஊழியருக்கு கடமை நேரத்தில் காயமேற்படுத்தியமை, அரச உத்தியோகத்தரைக் கடமைசெய்யவிடாது தடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பொலிஸார் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணிகளான எம்.முஸ்தபா, ஏ.நசீர் எம்.சலீம் உள்ளிட்ட ஏழு சட்டத்தரணிகள் ஆஜராகி, மருத்துவக் காரணங்களை முன்வைத்து அவருக்குப் பிணை வழங்கவேண்டுமென வாதாடினர்.
பாதிக்கப்பட்டபெண் சார்பில் சட்டத்தரணி முத்துலிங்கம் ஆர்த்திகா ஆஜராகி வாதிட்டார்.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரந்த ஜயலத், மன்றில் இன்னும் சாட்சியங்கள் பூரணமாக பதிவுசெய்யப்படாமையால் இவர் அதற்கு இடைஞ்சலாக இருக்கலாமென்பதால் பிணை வழங்கக் கூடாதென்று கூறினார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் ஊழியர், கல்முனை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அத்தாட்சிப் பத்திரத்தையும் பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.
பொதுமக்களின் கொதிநிலை, சாட்சியங்கள் பூரணமாக பதிவுசெய்யப்படாமையால் நீதவான் பிணைவழங்க மறுத்துவிட்டு, சந்தேகநபரை இம்மாதம் 14ஆம் திகதிவரை அதாவது ஏழு தினங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சிறைச்சாலையில் தேவைப்படின் சந்தேகநபருக்கு மருத்து வசதி வழங்கவும் நீதவானால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.