அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பெயரில் இராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை சுலேமானீ கொல்லப்பட்டார்.
இரானின் அதிஉயர் தலைவர் அயத்துல்லா காமேனி பாரம்பரிய முறைப்படி நடந்த தொழுகைக்கு தலைமை தாங்கினார். ஒரு கட்டத்தில் அவரும் அழ துவங்கினார்.
சுலேமானீயின் மரணத்திற்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என இரான் உறுதியளித்துள்ளது. மேலும் 2015ம் ஆண்டு கையெழுத்திட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்தும் இரான் பின்வாங்கியது.
62 வயதான சுலேமானீ மத்திய கிழக்கு நாடுகளில் இரானின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார். மேலும் அமெரிக்க நாட்டை பொறுத்தவரை சுலேமானீ பயங்கரவாதியாக கருதப்பட்டார்.
ஆனால் சுலேமானீயின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட காட்சிகளை இரானின் ஊடகங்களில் காணமுடிகிறது.
''அமெரிக்காவிற்கு மரணம்'' என்ற முழக்கங்களோடு , இரான் மக்கள் இறுதி ஊர்வலத்தில் பெரும் திரளாக கலந்துக்கொள்கின்றனர் .
என் தந்தையின் மரணத்தோடு அனைத்துமே முடிந்துவிட்டது என நினைத்து கொள்ளாதீர்கள் என அதிபர் டிரம்புக்கு, சுலேமானீயின் மகள் சீயிநாப் சுலேமானீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் என்ன பதிலளித்துள்ளார்?
இரான் தக்க பதிலடி கொடுப்பதாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவை இலக்கு வைத்தால், மேலும் இரானின் 52 பாரம்பரிய தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. மற்ற உலகத் தலைவர்கள் நிதானத்தை வலியுறுத்துகின்றனர்.
இரானின் முக்கியமான பாரம்பரிய தலங்கள் என்னென்ன?
இரானின் பாரம்பரிய தலங்கள் தாக்கப்படும் என டிரம்ப் விடுத்த எச்சரிக்கை, இரானியர்கள் மற்றும் பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சர்வதேச சட்டத்தின்படி அவ்வாறான செயல்கள் போர் குற்றமாக கருதப்படும்.
யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டஜன் உலக பாரம்பரிய தலங்களை இரான் கொண்டுள்ளது.
இரானை ஆட்சி செய்த குவாஜார் மன்னர்களின் கொலெஸ்டான் அரண்மனை, இஸ்ஃபாஹான் நகரத்தில் உள்ள 17ம் நூற்றாண்டின் நக்ஷ் இ ஜஹான் சதுக்கம், மற்றும் 518கி.மு வில் கட்டப்பட்ட பெர்ஸ் போலீஸ் கட்டடம் என பல பாரம்பரிய தலங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் யுனஸ்கோவின் பட்டியலில் இடம்பெறாத முக்கியமான பல கலாசார முக்கியத்தும் வாய்ந்த இடங்களும் இரானில் உள்ளன.