web log free
October 18, 2024

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு?

முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அறியமுடிகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடலின் அடிப்படையாக வைத்து விசாரணைகளை முன்னெடுத்து அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருதாக எதிரணி குற்றஞ்சாட்டுகிறது.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்காக காய்நகர்த்தலை அரசாங்கம் முன்னெடுப்பதாக குற்றம் சாட்டினார்.

இதேவேளை, துமிந்த சில்வா மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வழக்குத் தாக்கல் செய்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தண்டனையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், காலியில் இடம்பெற்ற கூட்டமொன்றி்ல் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,  துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை மீள் பரிசீலனை செய்யவேண்டுமென வழியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கும் இடையில் ஏற்பட்ட தொலைபேசி உரையாடலின் அடிப்படையிலேயே துமிந்த சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அவரையை சிறையில் தள்ளியுள்ளனர் என ஆளும் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.