எப்.முபாரக்
மண் வெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டஇரண்டு பெண்களையும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு உத்தரவிட்டுள்ளார்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள குடும்பமொன்றில் ஏற்பட்ட தகராரொன்றை அடுத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்களான, 32,35 வயதுகளுடைய பெண்கள் இருவரையும், திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் இன்று (27) முன்னிலைப்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களின் தாயார் சுகவீனமுற்றிருந்துள்ளார். அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது கடமையிலிருந்த வைத்தியர், அந்த தாயார் வயது முதிர்ந்தவர் என்பதினால் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறந்த முறையில் உணவு வகைகளை வழங்குமாறும், சுப்பு காய்ச்சி கொடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நோயாளியை கவனிப்பதில் குடும்ப அங்கத்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் அதில் மண்வெட்டியால் தாக்கிய காயம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டையடுத்து விசாரணைச் செய்த பொலிஸார், தாக்குதல் நடத்திய இரண்டு பெண்களையும் கைது செய்ததாகவும், பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பதில் நீதவான் முன்னிலையில் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்தே, தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இரண்டு பெண்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.