முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தொகுதி அமைப்பாளர் பதவியை பறிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று இரவு நடைபெற்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தீர்மானம் எடுத்தது.
எனினும் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தீர்மானம் எடுத்திருந்தார்.
இதன் காரணமாக கட்சியின் முடிவுக்கு முரணாக செயற்பட்ட காரணத்திற்காக அவரது அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியைப் பறிக்க கட்சி தீர்மானித்திருக்கின்றது.
இதுதவிர, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக செயற்பட்ட சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் 20 பேரது தொகுதி அமைப்பாளர் பதவிகளைப் பறிக்கவும் சுதந்திரக் கட்சி முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.