எமது அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் ஒன்றுக்கான வேதனத்தை வழங்குமாறு கோரியுள்ள போதும் பெருந்தோட்ட நிருவனங்கள் அதனை வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
எனவே பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபாய் சம்பளத்தை வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலபிட்டி பகுதியில் நேற்று (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாம் ஒன்றுக்கு வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரும் நிதியினை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தினை வழங்குவதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார்.
ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை இருந்தாலும் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தினை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியில் இருந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு முடியுமாக இருந்தால் இருக்க முடியும் முடியா விட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு செல்லமுடியும்.
பெருந்தோட்ட நிறுவனங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க எம்மால் முடியும். வரவு செலவு திட்டத்தை முன்வைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. எதிர்வரும் பொது தேர்தல் வரைக்கும் எமக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது முறையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்து மக்களுக்கான சேவையினை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என தெரிவித்தார்.