ரஞ்சன் ராமநாயக்கவுடன் தற்போதைய ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவு வெளியாவதை தடுக்க அரச தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னை விக்கிலீக்சின் ஜுலியனுக்கு இணையான நபர் என தெரிவித்துள்ள ரஞ்சன் ராமநாயக்க, பலதரப்பட்ட நபர்களுடனும் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து வைத்திருந்துள்ள நிலையில், மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவின் விடுதலைக்கு உதவக்கூடிய சில ஒலிப்பதிவுகளை ஹிரு தொலைக்காட்சியினரும் அவர்கள் சார்பான இனவாத கடும்போக்குவாதிகளான டான் பிரியசாத் மற்றும் சிஹல உரிமய உட்பட்ட அமைப்புகளும் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த கட்ட ஒலிப்பதிவுகளை ரஞ்சனின் சகாக்கள் வெளியிடுவதற்கான முயற்சிகளை செய்து வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கான முயற்சியில் தற்போதைய அரச தரப்பின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அறியமுடிகிறது.
இது குறித்து முன் கூட்டியே கருத்துரைத்திருந்த மஹிந்த ராஜபக்ச, தான் பிறந்த நாள் வாழ்த்து மாத்திரமே தெரிவித்திருந்ததாக அண்மையில் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.