web log free
May 06, 2024

நீதிபதி கிஹானிடம் 3 மணிநேரம் விசாரணை

ரஞ்சன் ராமநாயக்கவுடன், ​சர்ச்சைக்குரிய உரையாடலில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம், மூன்று மணிநேரத்துக்கு மேல் வாக்குமூலம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (19) பெற்றுக்கொள்ளப்பட்டது எனப் பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமா அதிபர் உப்புல டி லிவேரா, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு கட்டளையிட்டிருந்தார்.  அந்தக் கட்டளைக்கு அமைவாகவே, இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்றுக்காலை 10 மணியளவில் வருகைதந்தார். அவரிடம், பிற்பகல் ஒரு மணிவரையிலும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொழும்பு பிரதான நீதவானாகக் கடமையிலிருந்த போது, முக்கிய மற்றும் சர்ச்சைக்குரிய வழக்குகள் சில தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தனக்கு அழுத்தங்களைக் கொடுத்தாரென, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய, பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவால்,2020 ஜனவரி 9ஆம் திகதியன்று அவ்வாறான முறைப்பாடொன்று பதில் பொலிஸ் மா அதிபருக்குச் செய்யப்பட்டுள்ளதாகவும், பதில் பொலிஸ் மாஅதிபர், அந்த முறைப்பாட்டை மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சேபந்து தென்னகோனுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த முறைப்பாட்டை சேபந்து தென்னகோன், கொழும்பு குற்றப்புலனாய்வு பணிப்பாளருக்கு விசாரணைகளுக்காக அனுப்பியுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த எழுத்துமூலமான முறைப்பாடு தொடர்பிலும், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிஹான் பிலப்பிட்டிய, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் 2015ஆம் ஆண்டு முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். அந்த முறைப்பாடு தொடர்பில், அன்றிருந்த  பொலிஸ் மாஅதிபர் என்.கே. இளங்ககோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த முறைப்பாடு தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென, கிஹான் பிலப்பிட்டியவின் இரண்டாவது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவுடன், அலைபேசி உரையாடல்களில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி என் ரணவக, சேவையிலிருந்து தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால ஆகியோரிடம், மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவில் வாக்கமூலங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.