பாராளுமன்றத்தில், சபைக்கு கடந்த நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16 ஆம் திகதிகளில், மிளகாய்த்தூள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில், சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரே, தங்களுடைய சப்பாத்துக்களுக்குள் மிளகாய்த்தூளை மறைத்துவைத்து, சபைக்கு கொண்டுவந்துள்ளனர்.
அதன்பின்னர், அங்கிருந்த தண்ணீர் போத்தலுக்குள் அதனை கலந்து, பொலிஸார் மீது வீசியெறிந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் ஆசனத்தில் தண்ணீர் ஊற்றியமை, புத்தகங்களால் தாக்குதல்கள் நடத்தியமை, கத்தியை காண்பித்து மிரட்டியமை, மிளகாய்த்தூள் வீசித் தாக்குதல், கதிரை உடைத்து தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட, பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு, அதன் விசாரணை அறிக்கையை, கடந்த 22 ஆம் திகதியன்று சபாநாயகரிடம் கையளித்தது.
அந்த அறிக்கையின் பிரகாரம், இரு தரப்புகளையும் சேர்ந்த 59 பேர், மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் பேரில் இனங்காணப்பட்டுள்ளனர்.