தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி M.N. அப்துல்லா முன்னிலையில் இன்று (22) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையின் சாட்சியாளராக மேல் நீதிமன்ற நீதிபதி M.N. அப்துல்லாவும் காணப்படுவதால் பிறிதொரு நீதிபதியை வழக்கிற்கு நியமிக்குமாறு கோரப்படவுள்ளது.
இதன் காரணமாக வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பிரதிவாதிகளின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா என அழைக்கப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் M. கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க ஆகியோரும் வழக்கின் பிரதிவாதிகளாவர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு நத்தார் நள்ளிரவு ஆராதனையின்போது சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.