மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்யுமாறு சட்ட மாஅதிபர் வழங்கிய பணிப்புரை தொடர்பில் அரசியலமைப்பு பேரவை விசேட அவதானம்
மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைதுசெய்யுமாறு சட்ட மாஅதிபர் தப்புல.டி.லிவேரா பொலிஸாருக்கு வழங்கிய பணிப்புரை குறித்து நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சட்ட மாஅதிபரினால் வழங்கப்பட்ட இந்தப் பணிப்புரை காரணமாக நீதிமன்றம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கை வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பணிப்புரையின் காரணமாக நீதிமன்றக் கட்டமைப்பின் சுயாதீனத் தன்மை மற்றும் நீதிபதிகளுக்கு தொழில்ரீதியாகக் காணப்படும் கௌரவம் என்பவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புப் பற்றியும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சட்ட மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டமை மற்றும் பொலிஸ் மாஅதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பிலும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.
இது தொடர்பில் கௌரவ சபாநாயகர், சட்ட மாஅதிபரை அழைத்து கலந்துரையாட வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அரசியலமைப்பு பேரவை கடந்த வெள்ளிக்கிழமை (24ஆம் திகதி) கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியிருந்ததுடன், இதில் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தலதா அத்துகோரல, சிவில் அமைப்பின் உறுப்பினர்களான என்.செல்வகுமார், ஜாவிட் யூசுப் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.