ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறவிருந்தது எனினும், தலைவரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையிலான அரசியல் கூட்டணி மற்றும் அதன் நிர்வாக பதவிகள் குறித்து இறுதி முடிவை எடுக்க இன்று உத்தேசிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கடந்த செயற்குழுவில் கலந்துகொள்ளாத சஜித் ஆதரவாளர்கள் இன்று நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சில பிரச்சினைகளை பேசவிருந்தனர்.
ஆனால் கட்சித் தலைவர் ரணிலால் இறுதி நேரத்தில் இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் மார்ச் முதல் வாரத்தில் கலைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தயாராக உடனடி நடவடிக்கைகளை எடுக்காமல் இவ்வாறு கட்சித் தலைமை இழுத்தடிப்பு செய்வது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அதேமசயம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் இவ்வாறே இறுதி நேர முடிவுகளுக்கு ரணில் திட்டமிட்டதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் செயற்குழு ஒத்திவைக்கப்படுமாயின் தன்னிச்சையாக சில தீர்மானங்களை சஜித் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி எடுக்குமென அறியமுடிந்தது.
புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக, மத்தும பண்டார எம்.பியை தெரிவு செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் நேற்று (06) தீர்மானிக்கப்பட்டது.
பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்கவேண்டுமாயின், கட்சியின் செயற்குழுவில் அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தது.