web log free
November 29, 2024

“தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும்” - ராஜபக்ஷவிடம் மோடி வலியுறுத்தல்

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை அளித்து அவர்கள் அமைதியாக வாழ வழிவகை செய்திட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளார்.

அவர்களுக்கு அங்கு உரிய நீதி மற்றும் மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

"இலங்கை தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு உணரும் என நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருடன் அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் என 10 பேர் அடங்கிய உயர் நிலைக் குழுவும் வந்திருந்தனர்.

இந்த பயணத்தின் போது வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது.

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பிற்கு பின் பேசிய பிரதமர் மோதி, "இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய நண்பர்கள். இரு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. நமது பிராந்தியத்தில் தீவிரவாதம் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இருநாடுகளும் இதற்கு எதிராகப் போராடி வருகிறோம். மேலும் ஒன்று சேர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் குறித்துப் பேசிய மோதி, அத்தாக்குதல் இலங்கைக்கு மட்டுமல்ல மனிதத்திற்கே எதிரான தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்ஷ, "பிரதமராக பதவியேற்ற பிறகு என் முதல் அரச முறை பயணமாக இந்தியா வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார். அதனை சார்ந்தே இன்று ஆலோசித்தோம்" என்று கூறினார்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் சீன ஆதரவுப் போக்கு உடையவர்கள் என்று கருத்து நிலவி வந்த நிலையில் மகிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இந்தியா வருவது அரசியல் நோக்கர்களை இந்த விஷயத்தைக் கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.

தொடர்ந்து ராஜபக்ஷ உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி, காசி விஸ்வநாதர் கோயில், சார்நாத் பௌத்த ஆலயம், கயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு சென்று வசிக்க உள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd