web log free
May 03, 2024

இன்றுமொரு புதிய கூட்டணி களமிறங்கும்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகள் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இரண்டு பிரதான கட்சிகளுடனும் கூட்டு சேராத மிதவாத கொள்கைகளையுடைய சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் தரப்பினரை இணைத்துக் கொண்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரியவருகின்றது.

இதன் ஒரு கட்டமாக மேல் மாகாண முன்னாள் ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னணியின் (EM)  தலைவருமான அசாத் சாலியின் கொழும்பு இல்லத்தில் மேலும் முன்னாள் ஆளுநர்களின் பங்களிப்புடன் முக்கிய சந்திப்பொன்று (08/02/2020) இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஆளுநர்களான பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், முன்னாள் ஊவா மாகாண ஆளுநருமான கீர்த்தி தென்னக்கோன், ஜனாதிபதி சட்டத்தரணியும், மத்திய மாகாண முன்னாள் ஆளுநருமான மைத்ரி குணரத்ன, சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநரான தம்ம திசாநாயக்க மற்றும் வட மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கரைந்து போனதும், ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ சர்ச்சை மற்றும் ஸ்திரமின்மை ஆகிய காரணங்களால் சிறுபான்மை மக்கள் அந்த பிரதான கட்சிகள் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதையிட்டு ஆளுநர்கள் ஐவரும் கரிசணை வெளியிட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடித்து வருகின்ற சூழ்நிலையில், கட்சியின் தேசிய பதவி நிலையொன்றுக்கு முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களால் சிறுபான்மை இனத்தவரான முஸ்லிம் மக்களின் ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி இழப்பதற்கு நேரிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

இதுதவிர, இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் நாட்டையும், நாட்டு மக்களினது எதிர்ப்பார்ப்புகளையும் சீரழித்து விட்டதாக சபாநாயர் கரு ஜயசூரிய கூறியிருந்தார். அத்துடன் நாட்டில் ஊழல் மோசடிகள் மலிந்து போய் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாத ஒரு சூழ்நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளளன.

இந்த பின்புலத்தில் அரசியல் கறைபடியாதவர்களையும், புத்திஜீவிகளையும், மிதவாத நிலைப்பாடுடையவர்களையும் இணைத்துக் கொண்டு ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான தேவையின் நிமித்தம் புதிய கூட்டணிக்கான பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் எவ்வித இறுதி முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதுடன், மற்றுமொரு சந்திப்புக்கான இணக்கத்துடன் முன்னாள் ஆளுநர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும், தேசிய அரசியல் நீரோட்டத்தில் தொடர்ந்தும் மக்களின் அபிலாஷைகளையும், எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவேற்றும் நோக்கத்துடன் நீடித்த அரசியல் பயணமொன்றை முன்னெடுப்பதன் தேவையை புதிய கூட்டணி பூர்த்தி செய்யுமா என்பது கேள்விக்குறியாகும்.