அரசாங்க விவகாரங்கள், திட்டங்கள் அல்லது பிற நிதி பரிவர்த்தனைகளில் பிரதமர் அல்லது அமைச்சர்கள் சார்பில் பிரதமரின் தனிப்பட்ட செயலாளர்கள் அல்லது பிற அமைச்சர்களின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் மற்றும் பிற தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி தொலைபேசி மூலமோ கடிதம் மூலமோ யாருக்கும் ஆணைகளை வழங்க முற்படக்கூடாதெனவும் அவர் கடும் பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து செயலாளர்களுக்கும் அமைச்சகங்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் மூலம் இது தொடர்பில் ஒரு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
அவ்வாறான விடயங்களின்போது எதாவது தகவல் பரிமாறப்பட்ட வேண்டுமாயின் பிரதமர், அமைச்சின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் இருந்த அனைத்து அரசாங்கங்களின் பிரதமர்கள் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களால் அரசாங்கத்தின் மீது நேரடி மற்றும் மறைமுக அழுத்தம் வழங்கும் பல நிகழ்வுகள் இருந்தமையை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.