இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 21 வயது இளைஞன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கணினி துறையில் தொழில்புரிபவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த 3 வருடங்களுக்கும் அதிக காலம் சமூக ஊடகங்களில் போலியான கணக்குகளை ஆரம்பித்து சிறுவர்களை ஏமாற்றியுள்ளார்.
அத்துடன், சிறுவர்களை அச்சுறுத்தி அவர்களின் ஆபாசப்படங்களை பெற்று அவற்றை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையதளங்களில் பதிவேற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சமூக ஊடகங்களின் தன்னை பெண்ணாக காட்டிக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத சமூக வலைத்தள கணக்குகளின் ஊடாக கிடைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என, குற்றப்புலனாய்வு பிரிவினர் அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், தனது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி வேறு நபர்களுக்கு சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ள இடமளிக்க வேண்டாம் என்றும் தமது சமூக வலைத்தள கணக்குகளின் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொற்களை மற்றவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டாம் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, இணையத்தளம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் போது, அதனுடன் தொடர்புடைய தரப்பினரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டியிருக்கும்.
எனேவே, தமது பிள்ளைகள் இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகாதவாறு பெற்றோர் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.