பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்சு பெண் கல்கி கோச்சலின். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரும் பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் காதலித்து 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவர்கள், 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்தியில் தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தனக்கு தமிழ் நன்றாகத் தெரிந்தும் தமிழில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கல்கி கர்ப்பமானார்.
தாய்மை அடைந்திருப்பதை பற்றி உருக்கமாக பேசியிருந்தார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமான வயிற்றைக் காண்பித்தபடி புகைப்படங்களை பதிவிட்டுவந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.