web log free
September 08, 2024

30/1 தீர்மானத்தை வாபஸ் பெறுவேன் -மஹிந்த அதிரடி,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த 30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்கு பிரவேசிக்க தடை விதிக்க அந்நாட்டு வெளியுறவுத் திணைக்களம் எடுத்த தீர்மானத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தி பிரதமர் வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவினால் இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள தடையின் நியாயம் தொடர்பில் பொது மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டாலும், அந்த குற்றச்சாட்டு என்னவென்பது தொடர்பில் எவருக்கும் தெரியாது எனவும் சட்டப்படி குற்றவாளியாக அறிவிக்கப்படும் வரை சந்தேகநபரொருவர் நிரபராதியாக கருத்தப்பட வேண்டும் என சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பேரவையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இலங்கை இராணுவத் தளபதிக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ அந்த விதி பொருந்துவதாக காண முடியவில்லை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் அமெரிக்காவுக்கு தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது என பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு செல்லப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி மேற்கொண்ட வரலாற்று காட்டிக் கொடுப்பு காரணமாக வேறு நாடுகளுக்கு எமது பாதுகாப்பு படையின் உறுப்பினர்களை இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நபர்களாக பெயரிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் முதலாவது செயற்பாட்டு வசனத்திலேயே, 2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கையின் ஆயுதம் ஏந்திய இராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தொகுக்கப்பட்ட அறிக்கையை வரவேற்றக்கப்பட்டிருந்து.

அவ்வாறு, யுத்தம் நிறைவடைந்த காலத்தில் இருந்து எமது பாதுகாப்பு படையினருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களும், ஐக்கிய தேசிய கட்சி - தமிழ் தேசிய கூட்டமைப்பு - மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், 30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள தற்போதைய எமது அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.