web log free
September 08, 2024

விபசாரம் குற்றமல்ல : நீதவான் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் சட்டத்தின் பிரகாரம் விபசாரத்தில் ஈடுபடுதல், பெண்ணொருவர் விபசாரத்தில் ஈடுபட்டு, தனக்கு வருமானம் தேடிக்கொண்டால் அது குற்றமல்ல என கொழும்பு கோட்டை நீதவான் ரங்கே திஸாநாயக்க தீர்ப்பளித்துள்ளார்.

​கொள்ளுப்பிட்டிய பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டில் 2015ஆம் ஆண்டு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஒரு தொகுதி தீர்ப்பை வழங்கியே நீதவான் ரங்கே திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விபசார விடுதிகளில் தங்கியிருந்து, விபசாரத்தில் ஈடுபட்டு, சம்பாதிப்பதன் ஊடாக முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ தங்களுடைய வாழ்க்கையை கொண்டுநடத்துதல் குற்றமல்ல.

1841 இலக்கம் 4 மற்றும் 1947 இலக்கம் 20 மற்றும் 1978 இலக்கம் 2 சட்டத்தின் திருத்தப்பட்ட கட்டளை சட்டத்தின் 09(​அ) பிரியை மீறியதல் தண்டனைக்குறிய குற்றமாகுமென கொள்ளுப்பிட்டி பொலிஸார் பெண்களை கைது செய்தனர்.

தாய்லாந்து பெண்கள் அறுவர், இந்த நாட்டை சேர்ந்த மூன்று பெண்களை கைது செய்த பொலிஸார் அப்பெண்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர்.

தாய்லாந்து பெண்கள், அக்குற்றங்களை ஏற்றுக்கொண்டனர். எனினும், ஏனைய மூன்று பெண்களும் நிரபராதிகள் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அதனால் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.  அதில், பெண்ணொருவருக்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இலங்கையில் நடை​முறையில் இருக்கும் சட்டத்தின் பிரகாரம், பிரதிவாதிக்கு எதிராக வழக்கை கொண்டு நடத்தமுடியாது. ஆகையால், வழக்கிலிருந்து பிரதிவாதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறே அப்பெண்ணை விடுதலை செய்த நீதிமன்றம், விபசாரத்தில் ஈடுபடுதல் இலங்கைக்குள் குற்றமல்ல. 1923 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதியன்று வழங்கப்பட்ட SAIB0 V. CHELLAM என்ற தீர்ப்பின் பிரகாரம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

வீடற்றவர்களுக்கான கட்டளை சட்டம் 1841 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது இறுதியாக 1947 ஆம் ஆண்டே திருத்தப்பட்டது. அப்போது, விபசாரத்தில் ஈடுபடுவது குற்றமாகும் என எங்குமே குறிப்பிடவில்லை என்றும் நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.