web log free
May 02, 2024

மோடியை இப்படித்தான் கொல்ல திட்டமிட்டனர்..

பிரதமர் மோடியை சில நாட்களுக்கு முன் கொலை செய்ய திட்டமிட்டனர், தற்போது அதேபோல்தான் டெல்லியில் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது, இதற்கு போராட்டக்காரர்கள்தான் காரணம் என்று பாஜக மூத்த தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்தது. நேற்று இந்த போராட்டத்தில் ராம் பகத் கோபால் என்ற நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

பின்பக்கம் போலீஸ் இருப்பதும் தெரிந்தும் அவர் மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.

பாஜகவின் மூத்த தலைவரும், டெல்லி தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக கருதப்படுபவருமான மனோஜ் திவாரி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், டெல்லியில் போராட்டக்காரர்கள் அமைதியாக போராடுவதாக கூறப்பட்டது. அது பொய் என்று தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நேற்று நடந்த துப்பாக்கி சூடு மூலம் உண்மை வெளியாகி உள்ளது. இதன் மூலம் போராட்டக்காரர்களின் உண்மையான குணம் இப்போது வெளியே தெரிய தொடங்கி இருக்கிறது.

போராட்டம் செய்யும் நபர்கள் அமைதியானவர்கள் கிடையாது. அவர்களின் ஆழ் மனதில் வன்முறை இருக்கிறது. அந்த வன்முறைதான் நேற்று நடந்த சம்பவத்திற்கு காரணம். இந்த போராட்டக்காரர்கள் எல்லாம் குண்டுகள் மீதும், தோட்டாக்கள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் எல்லோரும் வன்முறை மீது நம்பிக்கை கொண்டவர்கள். மக்கள் எல்லோருக்கும் நேற்றே இது தெரிந்து இருக்கும்.

இதேபோல்தான் பிரதமர் மோடியை கொலை செய்ய கூட திட்டம் தீட்டப்பட்டது. பிரதமர் மோடியை சுட வேண்டும் என்று சிலர் திட்டமிட்டனர். இப்போது அதே இடத்தில்தான் இன்னொரு துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது. இங்கு போராடும் மக்கள்தான் இதற்கு காரணம். அவர்கள் எல்லாம் இந்து மதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். ஜின்னாவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

இவர்களை காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதேபோல் இவர்கள் உடன் நிற்பதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இவர்களுக்கு மறைமுகமாக பணம் வருகிறது. இந்தியாவை துண்டாக உடைக்க இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பாஜக அதை அனுமதிக்காது. டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக சிறப்பாக வெற்றிபெறும். மக்கள் ஆதரவு எங்கள் பக்கம் உள்ளது. பிரிவினைவாதிகள் தோல்வி அடைவார்கள், என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.