web log free
November 29, 2024

தோல்வி அடைந்துவிட்டு கெஞ்ச வேண்டாம்: மஹிந்த

பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மண்கவ்வியவர்களுக்கு,  தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடமளிக்காது என்று அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ச நேற்று அறிவித்தார்.

மார்ச் – 12 இயக்கத்தின்  உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

தூய்மையான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக மார்ச் – 12 இயக்கம் உருவாக்கப்பட்டது.

விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவரகைளச் சந்தித்து, தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு மேற்படி அமைப்பு உதவிகோர திட்டமிட்டுள்ளது.

இதன் ஓர் அங்கமாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவை, மார்ச் – 12 இயக்கத்தினர் பிரதமரின் அதிகாரப்பூர்வ வதிவிடத்தில் வைத்து நேற்று (25) முற்பகல் சந்தித்தனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட மார்ச் – 12 இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியவை வருமாறு,

”  பொதுத்தேர்தலில் தகுதியான வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்குமாறு பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்தோம்.

சட்டவாக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் அவர்களுக்கு தெளிவிருக்கவேண்டும். இதன்காரணமாகவே தகுதியான வேட்பாளரை நிறுத்துமாறு கோரப்பட்டது.

அத்துடன், தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டாம் எனவும் கோரினோம்.

இளைஞர் மற்றும் பெண் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதமர், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும், தோல்வியடைந்தவர்களுக்கு தேசிய பட்டியல் நியமனம் தனது தலைமையின்கீழான கட்சியில் வழங்கப்படாது எனவும் உறுதியளித்தார்.” என்று கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd