web log free
May 19, 2024

கப்ரால், ஜி.எல், அலிக்கு அடித்தது அதிஸ்டம்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அலி சப்ரி ஆகியோர் பொதுஜன பெரமுன சார்பாக தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார்கள் என்று அரசாங்க வட்டார தகவல்களை சுட்டிக்காட்டி டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகரா கரியவசம் மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் பொதுஜன பெரமுனவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

90 களின் முற்பகுதியில் இருந்து அரசியலில் களமிறங்கிய ஜி.எல். பீரிஸ், கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாக தேசியப்பட்டியலுக்கு பரிந்துரைக்க படாதமையினை அடுத்து அவர் முதன் முறையாக நாடாளுமன்ற பிரதி நிதித்துவத்தை இழந்திருந்தார்.

மேலும் கடந்த நவம்பரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொருளாதார விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி மற்றும் கப்ரால் ஆகியோர் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழையவுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருணைகளை பிரதி நிதித்துவப்படுத்தியும் அவரது சகோதரர் சமல் ராஜபக்ஷ கமபந்தோட்டையை பிரதிநிதித்துவப்படுத்தியும் தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.

அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்முறை பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக புதிய முகங்கள் அறிமுகம் ஆகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.