முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பிடியாணையை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் பிறப்பித்தது.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 12 பேருக்கான வெளிநாட்டுப் பயணத் தடையை ஏற்கெனவே விதித்திருந்த கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம், அவர்களைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில், இன்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிக்கவிருந்தது.
எனினும், இன்று மாலை 6 மணிக்கே, அந்த தீர்ப்பு வெளியானது.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடிகள் தொடர்பான வழக்கு, கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட அறிவிப்பை நீதவான் விடுத்தார்.
பிடியாணை பிறப்பிப்பது தொடர்பில், சட்டமா அதிபரிடம், 7 கேள்விகள் அடங்கிய ஆவணமொன்று, நீதவானால் கையளிக்கப்பட்டு, இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு, சட்ட மா அதிபரும் பதலளிக்க முடியுமென்றார். ஆனால், அதற்கு சற்று காலநேரம் தேவையென்றும், நீதவானிடம் கோரினார்.
இந்நிலையிலேயே, இந்த வழக்கு, இன்று பிற்பகல் 2.30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
பெர்பெஷுவர் ட்ரெஷரீஸ் லிமிடட், சந்திரேஷ் ரவீந்திர கருணாநாயக்க, லக்ஷ்மன் அர்ஜுன மஹேந்திரன், அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், பளிசேன அப்புஹாமிலாகே தொன் கசுன் ஓஸதி, ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், ஷித்த ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் கார்தியே புஞ்சிஹேவா, துய்ய ஹென்னதிகே புத்திக சரத்சந்திர, சங்கரபிள்ளை பத்மநாபன், பதுகொட ஹேவா இந்திக்க சமன் குமார ஆகியோருக்கு எதிராகவே, இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இன்றிரவு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.