web log free
January 02, 2025

100,000 நெருங்குகிறது கோரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த எண்ணிக்கையை ஏற்கனவே கடந்துவிட்டதாக வேறு சில அமைப்புகள் கூறுகின்றன.

சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்று காரணமாக இதுவரை 3,000 பேருக்கும் மேல் இறந்துள்ளனர்.

இத்தாலியில் நேற்று, வெள்ளிக்கிழமை, ஒரே நாளில் 49 பேர் இறந்துள்ளனர். கொரோனா பரவலுக்கு பின் அந்த நாட்டில் 24 மணி நேரத்தில் நடந்த அதிகபட்ச இறப்பு இதுவாகும்.

இதனால் இத்தாலியில் ஒட்டுமொத்த மரணங்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. அங்கு சுமார் 4,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரானிலும் நேற்று ஒரே நாளில் 1,200 பேருக்கும் மேல் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினமான மார்ச் 5ஆம் தேதி அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 3,513 என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இரானில் இதுவரை குறைந்தது 109 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் இதுவரை 14 மரணமடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 8,300 கோடி டாலர் பணத்தை அவசரகால நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளார்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறப்பு விகிதம்

தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சீனா, தென்கொரியா, இரான், இத்தாலி ஆகிய நான்கு நாடுகளே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாகும்.

பாதிக்கப்பட்டவர்களில் 4.25% பேர் இத்தாலியில் இறந்துள்ளனர். இந்த இறப்பு விகிதம் சீனா, இரான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் முறையே 3.8%, 2.6% மற்றும் 1.6% ஆக உள்ளது.

மேற்கண்ட நாடுகளைவிட தென் கொரியாவில் இந்த விகிதம் குறைவாக உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களில் 0.65% பேர் மரணித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd