web log free
May 06, 2024

புலிகளை பிடித்தது தவறா: கேட்கிறார் மஹிந்த

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையேதும் விதிக்கப்படாது என்றும், இலங்கையை சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்தாது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கிய குறுகிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

” இலங்கையை சர்வதேச நாடுகள் தனிமைப்படுத்திவருகின்றன என்று எதிர்க்கட்சிகள் போலி கருத்துகளை பரப்பிவருகின்றன. இதில் எவ்வித உண்மையும் கிடையாது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்டிருந்த இணை அனுசரணைலிருந்து நாட்டின் நலன்கருதியே விலகினோம்.

இவ்வாறு இணை அனுசரணை வழங்கிய செயற்பாட்டிலிருந்து விலகியதால் எந்தவொரு நாடும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

நாடொன்றுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலால் தடைகளை விதிக்கமுடியாது. ஐ.நா. பாதுகாப்புச் சபை ஊடாகவே அத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்கமுடியும்.

அதேவேளை, இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. எனவே, இலங்கைக்கு எதிராக போர்க்குற்றம் சுமத்தமுடியாது.

புலிகளின் பிடிக்கும் இருந்து சாதாரண தமிழ் மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையின்போது , ஏதாவது தவறு இடம்பெற்றிருந்தால், அது தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் உள்நாட்டு சட்டத்திட்டத்துக்கமையவே விசாரணை இடம்பெற்றது.

நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணமக ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாக இது தொடர்பில் அறிக்கையும் பெறப்பட்டிருந்தது.” – என்றும் மஹிந்த ராஜபக்ச கூறினார்.