குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் முன்னிலையாகி 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியது.
இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார கண்டி பிரதேசத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கொலை சதித்திட்டம் தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பான விசாரணைகளையடுத்து, பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாற நிலையில், இந்த விடயம் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.