அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு அந்த வைரஸின் தாக்கம் இல்லை என தெரியவந்துள்ளது. இதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் 2726 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுள் 54 பேர் இறந்துவிட்டனர். வாஷிங்டன்னில் 34 பேரும், கலிபோர்னியாவில் 5 பேரும், பிளோரிடாவில் 3 பேரும், நியூயார்க்கில் இருவரும், ஜார்ஜியா, நியூ ஜெர்சி, கோலோராடோ, லூசியானா, தெற்கு தகோடா, விர்ஜீனியா ஆகிய நகரங்களில் தலா ஒருவர் என இறந்துவிட்டனர்.
இதில் வாஷிங்டன் நகரத்தில்தான் பலி எண்ணிக்கையும் வைரஸின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபரை சந்தித்த பிரேசில் அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பிரேசில் பிரதமர் ஜெயிர் போலிஸோனாரா, அதிபர் டிரம்புடன் புளோரிடா ரிசார்டில் சந்திப்பு நடத்தினார். வெள்ளை மாளிகையிலிருந்து இந்த சந்திப்பில் பிரேசில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அதிபர் டிரம்ப் அந்நாட்டு அதிகாரிகள் அனைவரையும் கை கொடுத்து கட்டிப்பிடித்து வரவேற்று உபசரித்தார். இந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் நாட்டு அதிகாரிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
இந்த செய்தி வெள்ளை மாளிகை வட்டாரங்களை அதிர்ச்சி அடைய செய்தது. ஏனெனில் அந்த அதிகாரியுடன் டிரம்ப் நெருக்கமாக இருந்தார். டிரம்புடன் அவர் கை கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இதனால் அதிபர் டிரம்பிற்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்குமா என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கவலை கொண்டனர். வைரஸ் பாதிப்பு இருக்கும் 3 பேருடன் டிரம்ப் பழகியதால் பரபரப்பும் ஏற்பட்டது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை மருத்துவர்கள் கூறுகையில் டிரம்பிற்கு காய்ச்சல் ஏதும் இல்லை. எப்போதும் இருக்கும் உடல் வெப்பநிலை அவருக்கு இருந்தது. பிரேசில் நாட்டு அதிகாரியுடன் டிரம்ப் கைகுலுக்கிய சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு பின்னரும் அவரது உடல் வெப்பநிலை சீராகவே இருந்தது. எனினும் டிரம்ப்பிற்கு கொரோனா வைரஸ் பரிசோதனை எடுக்கப்பட்டது.
அந்த பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் டிரம்பிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏதும் இல்லை என வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து டிரம்ப் யாருடனும் கைக் கொடுப்பதில்லை. அதற்கு பதிலாக நமஸ்தே என்பதை தெரிவித்து வருகிறார். இதை தான் இந்தியாவில் இருந்து கற்று கொண்டதாகவும் கூறி வருகிறார்.