web log free
December 22, 2024

பொதுத் தேர்தல் நடக்கும்- கோத்தா அதிரடி

”வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த தீர்மானித்தோம். பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் , சமூக ஒன்று கூடல்களை தற்காலிகமாக தவிர்த்துள்ளோம். முதலில் அடையாளம் காணப்பட்ட சீனப் பெண்மணி குணமடைந்து நாடு திரும்பினார். பின்னர் அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

கொழும்பில் விசேட வைத்தியசாலை ஒன்றின் ஊடாக நாங்கள் இந்த நோயாளர்களை பராமரிக்கிறோம். விசேட கவனம் செலுத்துகிறோம். நோயாளர்கள் இருந்த பகுதி சுகாதார அதிகாரிகளால் கவனிக்கப்படுகின்றனர் . விசேட செயலணி ஒன்றின் மூலம் இதற்கான நடவடிக்கை எடுத்து 24 மணிநேர அலுவலகம் ஒன்றை இயக்கி வருகிறோம்.

மேலதிக நடவடிக்கைகளை எடுத்துள்ள அரசு இந்த வைரஸ் பரவுவதை தடுக்க இயலுமானவரை முயற்சிக்கிறது. ஊடகங்கள் ஊடாக அறிவுறுத்தல்களை வழங்குகிறோம். 12 வைத்தியசாலைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

முதலில் சீனாவில் இருந்து பாதுகாப்பாக நாம் 34 மாணவர்களை கொண்டுவந்தோம். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்களின் பின்னர் அனுப்பப்பட்டனர். யாருக்கும் பாதிப்பில்லை.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மக்கள் கூட்டம் அதிகம் திரளும் என்பதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும். சமயத் தலைவர்கள் தலையீட்டால் வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

விஸா வழங்கலை இடைநிறுத்தி பயண அறிவுறுத்தல்களை நாம் வழங்கியுள்ளோம். பொதுப் போக்குவரத்தும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. சுற்றுலாத்துறை பாதிப்படைந்து ஏற்றுமதியில் தாக்கங்கள் ஏற்பட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சார்க் அமைச்சர்கள் மட்ட செயலணி அமைக்கப்பட்டு இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..”

சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நேரலை விடியோ கொன்பரன்ஸ் கலந்துரையாடலில் உரையாற்றியபோது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார் .

சார்க் நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தத்தமது நாட்டின் செயற்பாடுகள் குறித்து இதன்போது விளக்கினர்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd