இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வந்து, புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசித்து வருபவர்கள் அடங்கிய 60 குடும்பங்கள், சுகாதாரச் சேவை அதிகாரிகளால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற முடியாத வகையில், நீதிமன்ற ஆணையும் பெறப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் சந்திரசிறி பண்டார தெரிவித்தார்.
குறித்த நபர்கள், சுகாதாரச் சேவை அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேளாது, சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துள்ளனர் என்றும் இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வந்த 800க்கும் அதிகமானவர்கள், வென்னப்புவ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தங்கியுள்ளனர் என்றும் இவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும், மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.
இவர்களில் பலர், புத்தளம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில், பல விருந்துபசாரங்களையும் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருவதாக, சுகாதாரச் சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.