ஜனாதிபதி படுகொலை சதித்திட்டம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பெப்ரவரி 13ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையிலேயே பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி நாமல் குமார என்ற நபரால் கண்டியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஜனாதிபதி படுகொலை சதித் திட்டம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டது.
அதனை அடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அவர் வகித்த பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் 5 நாட்கள் தொடர்ச்சியாக வாக்குமூலம் பெற்றுக்கொண்டதை அடுத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.