பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கான உரிய காரணம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இதற்கெதிராக நிச்சயம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வேன். திட்டமிட்ட வகையில் அரசியல் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
அபே ஜன பலவேகய கட்சியின் ஊடாக பொதுத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்து தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொதுத்தேரதலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தேன். ஆனால் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.
பெற்றுக்கொள்ளப்பட்ட மக்களாணை திசைதிரும்பி செல்லப்படுவதை உணர்ந்து பொதுத்தேர்தலில் தனித்து அதாவது புதிய கட்சியின் ஊடாக போட்டியிட தீர்மானித்தேன். எமது கட்சியில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரும் இணைந்து கொண்டார்.
குருநாகலை, மொனராகலை உள்ளிட்ட பிரதேசங்களில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான உரிய காரணிகள் ஏதும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்த செயற்பாட்டுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளேன். நிச்சயம் எமக்கு நீதி கிடைக்கப்பெறும்.
பௌத்த மதகுருமார்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடாது. என்ற தவறான நிலைப்பாட்டை சமூகத்தின் மத்தியில் தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள்.பௌத்த மதம் புராதான தொல்பொருட்கள் மற்றும் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் நிச்சயம் பௌத்த மத குருமார்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டியது அவசியம் என்றார்.