web log free
December 21, 2024

கொரோனாவால் 13,407 பேர் பலி

1.கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக உலகம் முழுவதிலிருந்தும் தகவல்களைத் திரட்டி உடனுக்குடன் தங்கள் இணையத்தில் வெளியிட்டு வருகிறது.

3.மதிய நிலவரத்தின்படி உலகம் முழுவதிலும் 307,297 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை 311,988 என்பதாக இப்போது உயர்ந்துவிட்டது.

4.அதுபோல 13,049 என்று இருந்த பலி எண்ணிக்கை, இப்போது 13,407 ஆக உயர்ந்துவிட்டது.

5.இத்தாலியில் மட்டும் பலி எண்ணிக்கை 4,825 ஆக உள்ளது.

6.இதுவரை சீனாவில் 3,144 பேரும், இரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,720 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

7.கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் கடந்த ஒரு நாளில் மட்டும் 400க்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தாலிக்கு அடுத்ததாக மிக மோசமாக ஸ்பெயின் பாதிக்கப்பட்டுள்ளது.

8.கொரோனாவை எதிர்கொள்ளத் தற்காலிக மருத்துவமனையை ஸ்பெயின் அதன் தலைநகர் மேட்ரிட்டில் ஏற்படுத்துகிறது. இந்த மருத்துவமனையில் 5,500 படுக்கை வசதிகள் இருக்கும்.

9.கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்கா அளிப்பதாகக் கூறிய உதவிகளை இரான் மறுத்துள்ளது. இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி தனது தொலைக்காட்சி உரையில், "அமெரிக்காவைத் தனது தீய எதிரி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

10.மேலும் அவர், "நீங்கள்தான் இந்த வைரஸை உருவாக்கியவர்கள் என குற்றஞ்சாட்டப்படுகிறது. அது உண்மையா எனத் தெரியாது. ஆனால், இரானுக்கு நீங்கள் உதவ விரும்புவது எங்களுக்கு விநோதமாக இருக்கிறது, சந்தேகத்தையும் எழுப்புகிறது," எனக் கூறி உள்ளார்.

11.இரானியர்களின் மரபணு தகவல்களை பல்வேறு விதங்களில் திரட்டி இரானியர்களை குறிவைத்தே இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்

12.தென் கொரியாவில் அரசின் கோரிக்கையைப் பொருட்படுத்தாமல், தேவாலயங்கள் வழக்கம் போல இயங்கின

13.வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடக்கும் வழிபாடுகளை நிறுத்தி வைக்கும்படியும் அல்லது இணையம் மூலமாக மத சேவைகளைத் தொடரும் படியும் அழைப்பு விடுத்திருந்தது தென் கொரிய அரசு. ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போல இயங்கின

14.தேவாலயங்களுக்கு வரும் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.

15தென் கொரியாவில் மட்டும் 8,897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 98 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

16.இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.

17.தமிழர்கள் அதிகளவில் வாழும் யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

18.சுவிஸர்லாந்திலிருந்து வருகை தந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவருடன் சந்திப்பு நடத்திய ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

19.மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மார்ச் 24 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

20.மலேசியாவில் கொரோனா தொற்றால் 10 பேர் பலியாகி உள்ளனர். இன்று அதாவது மார்ச் 22 ஆம் தேதி புதிதாக 123 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

21.மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோணையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

22.ஆஸ்திரேலியாவில் வழிபாட்டுத் தலங்கள் முதல் மதுபான விடுதிகள் வரை மூடப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. அதே நேரம் பொருளாதாரத்தைக் காக்கச் சலுகைகளை அறிவித்துள்ளது அந்நாடு. 1315 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் பலியாகி உள்ளனர்.

23.தனது பெற்றோர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கும்படி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரி உள்ளார். உங்களது நேசத்துக்குரியவர்களுக்காக இதனை நீங்கள் செய்தே ஆக வேண்டும். அவர்களை தொலைப்பேசியில் அழையுங்கள், ஸ்கைப் மூலமாகப் பேசுங்கள். ஆனால், நேரில் பார்ப்பதைத் தவிருங்கள் எனக் கோரி உள்ளார். பிரிட்டனில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 233 பேர் பலியாகி உள்ளனர்.




© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd