அதிக ஆபத்தான மாவட்டங்களாக இனங்காணப்பட்ட மூன்று மாவட்டங்களிலும், பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களும் அதிக ஆபத்தான மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளன.
அந்த மூன்று மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது, வீடு, வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது மக்கள் முண்டியடிப்பு; சுகாதாரத்திற்கு கேடு
- இவ்வலயத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு
- அத்தியாவசிய பொருட்கள் வீட்டுக்ககு அனுப்பி வைக்க ஏற்பாடு
- பொருட்கள் விநியோகத்திற்கு பசில் ராஜபக்ஷ தலைமையில் செயலணி
- நாளை முதல் நடைமுறை; விநியோக வாகனங்களுக்கு பயணிக்க அனுமதி
கொவிட் 19 கொரோனா வைரஸ் பரவலை கவனத்திற் கொள்ளும் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மிகவும் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ளதனால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இம் மூன்று மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (24) காலை தளர்த்தப்பட்ட வேளையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் கடைகளில் அதிகளவு ஒன்றுகூடியிருந்தமை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பாரிய இடையூறாக, சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
எனவே எதிர் வரும் காலங்களில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. சதொச, கீல்ஸ், லாப்ஸ், ஆபிகோ, புட் சிடி, அரலிய, நிபுண மற்றும் ஏனைய மொத்த விற்பனை நிலையங்கள் இப்பணிக்காக இணைத்துக்கொள்ளப்படும்.
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக பசில் ராஜபக்ஷ தலைமையில் செயலணி ஒன்று தாபிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் குறித்த வேறு அதிகாரிகள் இச்செயலணியின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.
இதற்குப் பின்னர் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், எரிவாயு, ஏனைய சேவைகளை தடையின்றியும் தொடர்ச்சியாகவும் மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை (25) முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
லொறி, வேன், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதற்கு பயன்படுத்திகொள்ளும் அனைத்து வழங்கள் வாகனங்களுக்கும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வீதிகளில் பயணம் செய்ய அனுமதி உள்ளது.