web log free
September 19, 2024

ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கை

இலங்கையில் அண்மைக் காலமாக அரசியல் குழப்பநிலை நீடித்து வந்த நிலையில், உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளதாக, டிரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் தெரிவித்துள்ளது.

180 நாடுகளைக் கொண்ட உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில், 37 புள்ளிகளுடன் இலங்கை 89ஆவது இடத்தில் உள்ளதாக, அந்த அமைப்பின் வேலைத்திட்ட முகாமையாளர் ஷகிதா மெல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளதாகவும் ஊழல் தொடர்பான மக்கள் மத்தியிலான தெளிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், டிரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் அமைப்பின் வேலைத்திட்ட முகாமையாளர் ஷகிதா மெல் தெரிவித்துள்ளார்.

உலகின் சிறந்த நாடுகளை அடையாளம்காணும் இந்தப் பட்டியலில் 88 புள்ளிகளுடன் முதலாவது இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. 87 புள்ளிகளுடன் நியூசிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இறுதி இடமான 180 ஆவது இடத்தில் சோமாலியா உள்ளது. இந்தப் பட்டியலில் ஊழல் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலங்கையை பொறுத்தவரையில், ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடாகவும், சர்வாதிகாரம் நிறைந்த நாடாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.